Thursday, June 7, 2012

ரசிகபெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்... (2)


ஹ்ம்ம்... :)


நண்பர் பிச்சைக்காரனுக்கு முதலில் என் நன்றி.

ஏனென்றால், பின்னூட்டம் எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்டபிறகு படித்துப் பார்த்த போது கொஞ்சம் over react செய்து விட்டோமோ என்று வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாகவே பிடித்துக்கொண்டீர்கள். மறுபடி நன்றி.

ஒரு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களுக்கும் என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த ராஜாவிற்கும் -

உங்கள் விமரிசனத்தில் வழக்கு எண் படத்தை நீங்கள் பிடித்து இருந்ததாக எழுதவில்லை. நான்தான் குழப்பிகொண்டேன். காரணம், உங்கள் வலைப்பூவையும் நண்பர் லுக்கிலுகின் வலைப்பூவையும் எப்பொழுதுமே குழப்பிக்கொள்வேன். அதுவே இப்பொழுதும் நடந்துவிட்டது...

"அடிச்சான் பார்யா பல்டி" என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. :)

இனி... என் சில கேள்விகள்...

பாரதியின் சைவ வைணவ சண்டையை பார்த்து நொந்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற வசவும், சாருவின் 'பாத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத தமிழர்கூட்டம்' என்ற வசவும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா...?

பத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத கூட்டம் எப்படி பெரிய கூட்டமாகும்? சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்...? சாருவே ஒப்புக்கொள்கிறார். முதலில் இதை ஒப்புக்கொண்டால்தான் இந்த சிறிய கூட்டத்தை பெரியதாக ஆக்க முயல முடியும். இந்த கூட்டத்திற்கே "அவர்கள்" பதட்டப்படுகிறார்களே என்று பேசித்திரிவது எந்தவிதத்திலும் பெருமை கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து. (முதலில் நமது கூட்டம் அவர்கள் கூட்டம் என்பதே உடன்பாடில்லாத விஷயம். சில மாதங்கள் முன்புவரை இரண்டும் ஒரு கூட்டமாகத்தான் இருந்தது...)

// சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். // - மன்னிக்கவும். அப்படி எல்லாம் யாராலும் - திரும்பவும் சொல்லுகிறேன் - யாராலும் இருக்க முடியாது.

என்னுடைய சவால் என்று நான் சொன்னது நண்பர் ராஜாவை காயப்படுத்தியிருப்பது போல் படுகிறது. அது விளையாட்டாக சொல்லப்பட்டது அல்ல நண்பரே. என்றோ ஒருமுறை சாருவின் வலைபூவிலேயே அவர் நாவல்களைப்பற்றி வாசகர் வட்டத்தில் நடந்த விவாதமாக நடந்ததை வெளியிட்டு இருந்தார். அதில் சாருவின் தீவீர வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களே தாங்கள் படித்த சாருவின் கதைகளை ஒரு குழப்பத்துடனே விவாதித்தார்கள். இப்பொழுதும் சொல்லுகிறேன் - அவரின் எல்லா எழுத்துக்களையும் பத்து பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். என்னால் நண்பர் ராஜா அழைத்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் அது பிரச்சனையே அல்ல. நீங்களே திருப்திகரமாக சொல்லுங்கள் ராஜா. நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன்.

//நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது// - எங்கே சென்றுவிட்டது? முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா? இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா? அவர்கள் இசையை அவர்களுக்கே வாசித்து காட்டி கைதட்டல் வாங்கும் எ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளரா இல்லை நமது தவிலையும் நாதஸ்வரத்தையும் அங்கே எடுத்து செல்லும் தைரியம்கொண்ட இளையராஜா சிறந்த இசையமைப்பாளரா...

நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்று தெரியவில்லை... உங்கள் பதிலில் தெரியும் என்றும் என்று நம்புகிறேன். :)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment