Wednesday, February 2, 2011

என்ன நினைத்திருப்பார்கள்

வாழ்ந்து பார்க்க ஆசை...

காட்டிக் கொடுக்கப்பட்டபோது
கட்டபொம்மனாக - வெள்ளையன்
தட்டிக் கொடுத்தபோது எட்டப்பனாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

கொடியை இறக்கும்போது நேருவாக - இந்தியக்
கொடியை ஏற்றும் போது
(மவுன்ட்பேட்டன்) பிரபுவாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

குலைந்து விழுபவரைக்கண்ட கோட்செவாக -
நெஞ்சில்
குண்டடி வாங்கியபோது காந்தியாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

இதயத்தில் கோடுகிழித்து - நாட்டை
இரண்டாக பிளந்த போது
எந்தபாகம் எனதென்ற குழப்பத்தில்
வாழ்ந்து பார்க்க ஆசை...

நாய் திருடன்

மூக்குத் துவாரத்தில்
ரத்தம் வழிய
முப்பத்திரெண்டு பற்களில்
மூன்று குறைய

முகம் முழுவதும்
நகம் கீறியிருக்க
முழங்கை எலும்புகளின்
முழுமையில் கேள்வியிருக்க

நடையில் தளர்வு
உடையில் கிழிசலென
சோர்வாக நான்
சுருண்ட போது -

உள்ளேவந்த் ஆய்வாளர்
சாவதானமாய் சொன்னார்...

"எம்மெல்லே வீட்டுநாய்
கிடைச்சுடுச்சாம்...
முட்டைபால் சாப்பிட்டு
உடம்பை தேத்திக்கோ..."

ராணுவ வீரன்

மூன்றுவேளை உணவின் போது
மனைவிமக்களை நினைத்த ஏக்கமும்

முழங்காலில் துப்பாக்கி குண்டை
முழுமனதுடன் வாங்கிய பெருமையும்

மூவர்ணக் கொடி முன்னால்
வீரநடை பயின்ற நாட்களும்

வீட்டுப்பற்றை புறந் தள்ளி
நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்ததும்

நினைவுகளில்
வந்து வந்து போகிறது

நிறுவனமொன்றில் காவலாளியாய்
நிற்கும் நேரங்களில்....!

கண்டுபிடிப்புகள்

அறிவை கண்டுபிடித்துவிட்டு
அப்பாவித்தனங்களை தொலைத்திருக்கிறான்

அணுகுண்டுகளை கண்டுபிடித்துவிட்டு
அடக்குமுறை அபத்தமென்கிறான்

சப்தங்களை கண்டுபிடித்துவிட்டு
அமைதியே ஆனந்தமென்கிறான்

வண்ணங்களை கண்டுபிடித்துவிட்டு
கருமையே கடைசியென்கிறான்

கடவுள்களை கண்டுபிடித்துவிட்டு
அன்பே கடவுளென்கிறான்

எண்களையெல்லாம் கண்டுபிடித்துவிட்டு
சூன்யமே சூத்திரமென்கிறான்

பணத்தை கண்டுபிடித்துவிட்டு
பொருளாதாரத்தைத் தேடுகிறான்

வாழுமுறைமட்டும் கண்டுபிடித்திருந்தால்
வேறெதுவுமே வேண்டியிருந்திருக்காதோ....!

ஒரு நெல்லின் தவம்

விதைத்ததாகவே முளைத்தபோது
விம்மி வெடித்தேன்...
கதிரை அறுத்துக்கட்டியபோது
கனிந்து சிரித்தேன்...

காயவிட்டு காயப்படுத்தியபோது
கண்விழித்துக் காத்திருந்தேன்...
போரடித்துத் துவைக்கும்போது
போராடியெனை போற்றிவந்தேன்...

உரலிலிட்டு இடிக்கும்போது
ஊமைத்தவம் புரிந்துவந்தேன்...
பட்டைதீட்டி பாலிஷ் செய்தபோது
பொட்டிட்டுத் தயாரானேன்...

வெட்டிவிட்டு - நீ
வேண்டாம் இச்சோறென்று
உதறி யெழுந்தபோதுதான் -
உயிர் துறந்தேன்...