Thursday, August 26, 2010

கட்டறுத்த கயிறு

தொப்புழ்க்கொடி யறுத்த
தாயி னுறவு

தோளில்வைத்து தாங்கிய
தந்தையி னுறவு

ஒவ்வொரு பிறந்தநாளையும்
ஒவ்வொரு விதமாய்
சிரித்துக்கொண்டே நினைவூட்டிய
சகோதர னுறவு

செல்லசண்டையில் சிணுங்கிய
சகோதரியி னுறவு

தளர்கைகளால் கன்னம்வழித்து
கதைகள் பலகூறி
கற்பனைகள் வளர்த்த
பாட்டியி னுறவு


வெள்ளியாறு போல
வெண்ணிலாவை வீட்டினுள்
வரவழைத்துத் தந்த
ஜன்னல்கம்பியி னுறவு

தினமொரு சிநேகம்
தேடித் தந்த
கொல்லைரோஜாவி னுறவு

வேகவைத்த வெய்யிலின்
வெப்பம் தணித்த
வேப்பமரத்தி னுறவு

வம்புபேசி வாயளந்த
அடுத்த வீட்டு
வனிதா அக்காவினுறவு

மழலை கொஞ்சி
முத்தத்தில் முகம் நனைத்த
அவள் குழந்தயினுறவு

குட்டியாகவே இருந்துவிடாதா
என்று ஏங்கவைத்த
கண்மருண்ட கன்றினுறவு

எல்லாவற்றையும் கட்டிபோட்டு
இழுத்துவந்துவிட்டேன் இவளை

ஒரு முழத்தில் -
நான்கட்டிய தாலிக் கயிறு...

5 comments:

  1. புரிந்து கொள்ள...... சற்று நேரம் ஆனது.......

    ReplyDelete
  2. ஒவ்வொரு ஆணும் இதைப் புரிந்து கொண்டால் போதும் !

    ReplyDelete
  3. இப்போது தமிழில் தட்டச்சு செய்வது சுலபமாகிவிட்டது....

    ReplyDelete
  4. ப்ரியா ‍= மிக்க நன்றி. உங்கள் பாராட்டு கருத்துக்கானது என்று நினைக்கிறேமன். கவிதை(?)க்கு...? இன்னும் நிறைய எழுதவேண்டும், கவிதைதான் என்று சொல்லிக்கொள்ள.... இல்லையா...!!!

    ReplyDelete
  5. அருமை மிக்க அருமை

    ReplyDelete