Monday, September 10, 2012

இசையும் அடிவருடிகளும் ( 3 )

http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் ஒருமுறை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது...


"நான் ஏன் சமூக சீர்திருத்தங்களைப்பற்றி எழுதுவதில்லை அப்படின்னு கேட்கறாங்க. நானும் எழுத வந்தபுதிதில் இந்த உலகை மாற்றியமைக்க வேண்டும். புரட்டி போடவேண்டும் திருத்தியமைக்க வேண்டும் அப்படின்னு நினைச்சது உண்டு.. போக போக புரிந்துகொண்டேன், இங்கே ஒரு மண்புழுவைக்கூட திருத்தமுடியாது என்பதை... "

- என்று நகைச்சுவையாக சொல்லியிருந்தார். ஆனால் அந்த நகைச்சுவையில் எவ்வளவு ஆழமும் அழுத்தமும் இருந்தது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமழ் மக்கட்தொகையில் பத்து சதவிகிதம் இணையம் உபயோகிப்பவர்கள் இருக்கலாம். அதில் பத்து சதவிகிதத்தினர் ப்ளாக் படிப்பவர்கள். அதற்குப்பின் எழுதுபவர்கள் என்று கணக்கு எடுத்தால் ஒரு ஆயிரம் பேர் மிஞ்சுவார்கள். இதில் இளையராஜாவை தூக்கிப்பிடிக்க, ரஹ்மானை தூக்கிபிடிக்க, எம்.எஸ்.வியை தூக்கிபிடிக்க, என்று ஆளாளுக்கு ஒருவரை தூக்கிப்பிடித்துகொண்டுதான் இருப்பார்கள். இதில் யார் யாரை மாற்றப் போகிறார்கள்... எதற்காக மாற்றவேண்டும்...

- என்பதான கேள்விகள் என் மனதில் எழுந்தாலும் திரு.காரிகன் சொன்னதுபோல் நல்ல தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு இடமாகவே இத்தளங்களைப் பார்க்கிறேன்...

மற்றபடி எனக்கான நல்ல இசை என்பது என் மனதைப் பொறுத்த விஷயம் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

கே.வி.எம்மின் இசை ஒரு விதத்திலும் எம்.எஸ்.வியின் இசை ஒருவிதத்திலும், இளையராஜாவின் இசை ஒருவிதத்திலும், ரஹ்மானின் இசை ஒருவிதத்திலும் என் மனதை வருடியிருக்கிறது. இதில் விட்டுப்போன என் அபிமானத்துக்குரிய திரு.எ.எம்.ராஜாவின் இசை... :) மறக்கவே முடியாத அனுபவம் அது.

இங்கே நான் இப்பொழுது பதிவு செய்ய நினைத்த செய்தி என்னவென்றால், இவர்களைத்தவிரவும், கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் பலப்பல இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றிஎல்லாம் நாம் விவாதிப்பதேயில்லை. ஒருபாடல் செய்தார்களோ ஓராயிரம் பாடல் செய்தார்களோ... எண்ணிக்கை இங்கு கணக்காகாது. ஒரு பிள்ளை மட்டுமே பெற்ற தாய் ஏழு பிள்ளை பெற்றவளைவிட எந்த விதத்திலும் குறைந்துபோவதில்லை. ஆனால் அத்தகைய மற்ற இசையமைப்பாளர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த நான்கைந்து பேர்களை மட்டுமே விவாதிக்கிறோமே.. அது ஏன்..?

ஏனென்றால் இவர்கள் அனைவரும் சாதித்தவர்கள் - அதனால்தான்; இவர்கள் trend setters. - அதனால்தான்; எந்தவொரு இசையமைப்பாளருக்கும் அவருடைய பிரான்ட் இசையை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் வென்றது இவர்கள் மட்டும்தான்.

வாழ்த்திவிட்டு போவோமே... என்ன பிரச்னை...?

இதுவே வேறு எந்த நாட்டவர்களாக இருந்திருந்தாலும் இத்தனை மேதைகள் தங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூரை ஏறி கூவியிருபார்கள்... என்ன செய்வது.. நாம் தமிழர்களாயிற்றே... மேலே ஏற முயற்சி செய்பவர்களின் காலைபிடித்து கீழே இழுத்து எல்லோரும் சேர்ந்து குழியில் விழுவதுதான் நம் குலவழக்கம்... கலாச்சாரம்... மாற்ற முடியுமா என்ன...?

யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்...

திரு காரிகன் அவர்களே... எந்த காரணத்திற்காகவும் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி...

Wednesday, September 5, 2012

இசையும் அடிவருடிகளும் ( 2 )


http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

திரு காரிகன்,


// எம் எஸ் வி போல யாரும் இங்கே கிடையாது என்று அமுதவன் சொன்னால் நீங்கள் அவரை அடிவருடி என்று விமர்சிக்கலாம். //

- இதற்கு திரு.அமுதவனுக்கு பதிலளிக்கும்போதே நான் சொல்லிவிட்டேன்.

// எம் எஸ் வி க்கு பிறகுதான் இளையராஜா வருகிறார், இருக்கிறார், இருப்பார். அவரை தாண்டி சொல்லும் மேன்மையான இசைதிறன் இளையராஜாவிடம் இல்லை என்பது அவருக்கே தெரியும் //

- அப்படியா...?

// எப்படி இளையராஜாவுக்கு பின் ரகுமானோ(இதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டீர்கள்) //

- மன்னிக்கவும். நான் யாருக்கு பின்னேயும் யாரையும் இருத்திப பார்ப்பதில்லை... எனக்கு இசை முறைபடிஎல்லாம் தெரியாது. தெரிந்தவரை, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, எ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. யார் முன்னே யார் பின்னே என்று பார்க்க எனக்கு தேவையே இல்லை. அவரவர் சப்தங்கள் எந்த இடங்களில் என் மனதை வருடுகிறதோ, ஒரு நன்றியை சொல்லிவிட்டு புன்னகைத்துக்கொள்வேன்.

// திரு அமுதவன் எம் எஸ் வி யை கடவுள் அளவுக்கு புகழ்வதாக நீங்கள் சொல்வது ஒரு தேவை இல்லாத விவாதத்திற்கு பாதை போடுகிறது //

- தேவை இல்லாத...? - அப்படியானால் அந்த விவாதத்தை தவிர்த்துவிடுவோம்... :)

// நானும் கூட இளையராஜாவின் சிறந்த பல பாடல்களை இன்றுவரை விரும்பி கேட்பவன்தான்.ஆனால் என்னால் இளையராஜா என்றால் இசை என்றும் அவரே தமிழிசையின் பிதாமகன் என்றும் கண்டிப்பாக பிதற்ற முடியாது //

- மிக உண்மை...

// இணையத்தில் இளையராஜாவை பற்றி எழுதும் பலபேர் சொல்லும் ஒரு cliche ராஜா ராஜாதான் என்பது.பின்னர் அவரின் இசை உயிரை உருக்கும் மனதை என்னமோ செய்யும் என்று வார்த்தைகள் இன்றி குழப்பமாக எழுதவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.பொதுவாக அவர்கள் இசையை பற்றிய ஒரு விஸ்தாரமான சிந்தனை கிடையாது. டி சௌந்தர் என்னும் ஒரு மிக அருமையான இசை விமர்சகர் எல்லா இசை அமைப்பாளர்களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு வந்து கடைசியில் இளையராஜாவோடு நின்றுவிடுகிறார்.எ ஆர் ரகுமானை காப்பி என்று ஒரே வார்த்தையில் புதைத்து விடுகிறார். இன்னும் ஒரு இளையராஜா அபிமானி(மதிமாறன் என்பவர்) சின்ன சின்ன ஆசை என்ற பாடலை விட மணியே மணிக்குயிலே என்னும் இளையராஜாவின் பாடல் வெகுவாக சிறந்தது என்றும் சின்ன சின்ன ஆசையை விரும்பிய எல்லா காதுகளும் முட்டாள் காதுகள் என்று அடைமொழி இடுகிறார்.இன்னொருவர் இளையராஜாதான் தமிழ் இசையில் பாடலுக்கு முன் இசை பாடலுக்கு இடையே இசை என்று ஒரு புதிய வடிவத்தையே புகுத்தினார் என்று வாய்கூசாமல் மைக் இல்லாமல் கூப்பாடு போடுகிறார்.இவர்களைத்தான் நான் அடிவருடிகள் என்று சொல்கிறேன்.//

- ம்ம்ம்ம்... இளையராஜாவின் ரசிகர்களுடைய ஆர்வக்கோளாறின் காரணமாக அநியாயமாக ராஜாவின் இசை அசிங்கப்படுவது வருத்தமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது.

Tuesday, August 28, 2012

இசையும் அடிவருடிகளும்

http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

திரு அமுதவன் அவர்களுக்கு என் வணக்கம். என்னை நிறைய தெரிந்து கொள்ளச் சொல்கிறீர்கள். புரிகிறது. என்னால் முடிந்தவரை கடைசிவரை தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். நன்றி.


நீங்கள் எம்.எஸ்.வியையும் அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்து புகழ்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். எம்.எஸ்.விக்கு பிறகு வந்த இளையராஜா எ.ர.ரஹ்மான் மற்றும் மற்ற இசையமைப்பாளர்களை காலில் தேய்த்து நசுக்க முயற்சிக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். எந்த பதிவில் நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று சொல்லக் கேட்டால் நான் விழிக்க கூடும். காரணம் உங்கள் பதிவிலுள்ள சொற்களில் அது வெளிப்படையாக இல்லை.... technically very clean... இங்கே உங்களது ஒரு கூற்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்...

// கோவைக்கவி அவர்களே, தங்களின் வருகைக்கு நன்றி.

'மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை'....என்னுடைய இந்த வார்த்தைகளின் 'தொனி' உங்களுக்குப் புரிந்திருந்தால் மகிழ்ச்சியே //

இந்த 'தொனி'தான் உங்கள் பதிவுகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றது... அது முழுக்க முழுக்க எம்.எஸ்.வியையும் அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்களையும் கடவுள் ரேஞ்சுக்கு வைத்து புகழ்கிறீர்கள், எம்.எஸ்.விக்கு பிறகு வந்த இளையராஜா எ.ர.ரஹ்மான் மற்றும் மற்ற இசையமைப்பாளர்களை காலில் தேய்த்து நசுக்க முயற்சிக்கிறீர்கள் என்றுதான் எனக்கு புரிகிறது... இதில் என் புரிதல் கோளாறா? நீங்கள்தான் விளக்கவேண்டும்.

இளையராஜா மற்றும் மற்ற இன்றைய இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் எல்லாரும் அடிவருடிகள், சொம்பு தூக்கிகள் என்றழைக்கப்படும்போது மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் மட்டும் எப்படி குணவான்கள் ஆகமுடிகிறது...? (மறுபடி நான் எப்போது அடிவருடிகள் சொம்புதூக்கிகள் என்று சொன்னேன் என்று தயவுசெய்து கேட்காதீர்கள்... உங்கள் எல்லா பதிவுகளிலும் உங்கள் 'தொனி'யை அப்படிதான் நான் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன்)

மற்றபடி இசையச் செய்யும் எதுவுமே நல்ல இசைதான். நான் இசையமைப்பாளர்களின் பெயரையோ அல்லது அவர்கள் பராக்கிரமத்தையோ பார்ப்பது இல்லை... அது என்னுடைய குறையாக இருந்தால் தகுந்த காரணத்துடன் சொல்லுங்கள். தங்கள் காரணம் திருப்திகரமாக இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன்.

Friday, June 8, 2012

காதல்

சுழியில் சிக்கிய


நான்....


நீரின்

மேடு பள்ளங்களில்

மோதி திரும்பும் பொழுதுகளிலும்

நினைவுகளில்

நீதான்...


நீ

என்ன செய்வாய்

என்ற எண்ணம்தான்...


என்னை தழுவிக்கொள்வாயா

காது மடல் வருடுவாயா

கூந்தல் கலைத்து

கன்னம் கடிப்பாயா

மூச்சு முட்டும்போது

முத்தமிட்டு மீட்பாயா


ஆனாலும் நீ...

ஏதாவது செய்தேயாகவேண்டும்


என்னைக் காப்பாற்ற


உயிர்குடிக்கும்

சுழலில் இறங்குவாயா?

உனக்கு நீச்சல் தெரியாதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உனது ஆடை களைந்து

கயிறாக்கி தருவாயா?

உனக்கு மானம் பெரியதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உச்சக் குரலில்

ஊர் கூட்டி அழைப்பாயா?

உனக்கு காட்டிகொடுக்கத் தெரியாதாயிற்றே...


என்ன செய்யப் போகிறாய்...

..............


தோள்தொட்டு உலுக்கி

எனை

எழுப்பினாய்...!

Thursday, June 7, 2012

ரசிகபெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்... (2)


ஹ்ம்ம்... :)


நண்பர் பிச்சைக்காரனுக்கு முதலில் என் நன்றி.

ஏனென்றால், பின்னூட்டம் எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்டபிறகு படித்துப் பார்த்த போது கொஞ்சம் over react செய்து விட்டோமோ என்று வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாகவே பிடித்துக்கொண்டீர்கள். மறுபடி நன்றி.

ஒரு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களுக்கும் என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த ராஜாவிற்கும் -

உங்கள் விமரிசனத்தில் வழக்கு எண் படத்தை நீங்கள் பிடித்து இருந்ததாக எழுதவில்லை. நான்தான் குழப்பிகொண்டேன். காரணம், உங்கள் வலைப்பூவையும் நண்பர் லுக்கிலுகின் வலைப்பூவையும் எப்பொழுதுமே குழப்பிக்கொள்வேன். அதுவே இப்பொழுதும் நடந்துவிட்டது...

"அடிச்சான் பார்யா பல்டி" என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. :)

இனி... என் சில கேள்விகள்...

பாரதியின் சைவ வைணவ சண்டையை பார்த்து நொந்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற வசவும், சாருவின் 'பாத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத தமிழர்கூட்டம்' என்ற வசவும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா...?

பத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத கூட்டம் எப்படி பெரிய கூட்டமாகும்? சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்...? சாருவே ஒப்புக்கொள்கிறார். முதலில் இதை ஒப்புக்கொண்டால்தான் இந்த சிறிய கூட்டத்தை பெரியதாக ஆக்க முயல முடியும். இந்த கூட்டத்திற்கே "அவர்கள்" பதட்டப்படுகிறார்களே என்று பேசித்திரிவது எந்தவிதத்திலும் பெருமை கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து. (முதலில் நமது கூட்டம் அவர்கள் கூட்டம் என்பதே உடன்பாடில்லாத விஷயம். சில மாதங்கள் முன்புவரை இரண்டும் ஒரு கூட்டமாகத்தான் இருந்தது...)

// சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். // - மன்னிக்கவும். அப்படி எல்லாம் யாராலும் - திரும்பவும் சொல்லுகிறேன் - யாராலும் இருக்க முடியாது.

என்னுடைய சவால் என்று நான் சொன்னது நண்பர் ராஜாவை காயப்படுத்தியிருப்பது போல் படுகிறது. அது விளையாட்டாக சொல்லப்பட்டது அல்ல நண்பரே. என்றோ ஒருமுறை சாருவின் வலைபூவிலேயே அவர் நாவல்களைப்பற்றி வாசகர் வட்டத்தில் நடந்த விவாதமாக நடந்ததை வெளியிட்டு இருந்தார். அதில் சாருவின் தீவீர வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களே தாங்கள் படித்த சாருவின் கதைகளை ஒரு குழப்பத்துடனே விவாதித்தார்கள். இப்பொழுதும் சொல்லுகிறேன் - அவரின் எல்லா எழுத்துக்களையும் பத்து பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். என்னால் நண்பர் ராஜா அழைத்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் அது பிரச்சனையே அல்ல. நீங்களே திருப்திகரமாக சொல்லுங்கள் ராஜா. நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன்.

//நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது// - எங்கே சென்றுவிட்டது? முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா? இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா? அவர்கள் இசையை அவர்களுக்கே வாசித்து காட்டி கைதட்டல் வாங்கும் எ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளரா இல்லை நமது தவிலையும் நாதஸ்வரத்தையும் அங்கே எடுத்து செல்லும் தைரியம்கொண்ட இளையராஜா சிறந்த இசையமைப்பாளரா...

நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்று தெரியவில்லை... உங்கள் பதிலில் தெரியும் என்றும் என்று நம்புகிறேன். :)

Tuesday, June 5, 2012

ரசிக பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

http://www.pichaikaaran.com/2012/06/blog-post.html#comment-form

நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இதில் என்ன புதிய பார்வை இருக்கிறது என்று குழப்பம் வருகிறது... ஏற்கனவே நிறைய பேர் இதை நிறைய விதங்களில் எழுதி இருக்கிறார்கள். ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோணத்திற்காக சாருவை கொண்டாட என்ன இருக்கிறது என்று புரியவில்லை.


மேலும், இங்கே நீங்கள் சிலாகித்து பேசி இருக்கும் அவரின் மற்ற கட்டுரைகளிலும் எதிலுமே ஒரு புதிய பார்வை, புதிய கோணம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாமே ஏற்கனவே பலமுறை பல பேரால் சொல்லப்பட்டதுதான். எழுதப்பட்டதுதான். இதில் சாரு எங்கே வித்தியாசபடுகிறார்? எழுத்துநடை என்று மறுபடி மறுபடி சொல்லவதில் எனக்கு சில தயக்கங்கள் இருக்கிறது.

content இல்லாத ஒரு எழுத்துநடை வெறும் வியாபார தந்திரம் மட்டுமே... புதிய மொந்தையில் பழைய கள் அவ்வளவே... இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

நீங்கள் சாருவின் பரம ரசிகனாக இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கமுடியாது. அது உங்கள் உரிமை. என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

சமீபத்திய உதாரணம் காட்டவா...

வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது?

நான் ஒரு சவால் விடவா?

சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால், அந்த கதை இதுவரை யாருமே எழுதாத படைப்பாக, தொடாத சிந்தனையாக இருந்துவிட்டால், அவருடைய அத்தனை புத்தகங்களையும் பத்து பத்து பிரதிகள் நான் வாங்கிக் கொள்கிறேன்.

அப்படி நடக்காமல் போனால், ஊரில் இருப்பவர்களை எல்லாம் வைது கொண்டு இருக்காமல் நீங்களும் இருக்கவேண்டும். சாருவையும் அப்படி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

நன்றி.

Thursday, February 9, 2012

மிச்சம்

"அம்மா வாங்க மருந்து சாப்பிடுங்க... மெதுவா... மெதுவா எழுந்துக்குங்க"

"ம்ம்ம்ம்... குடும்மா... அந்த ஜக்குல தண்ணி இருக்கு கொஞ்சம் எடுத்துக் கொடேன்"

"இந்தாங்க... இப்ப உடம்பு பரவாயில்லையாம்மா... வர்ற வாரம் இங்க இருக்கற எல்லாரும் குருவாயூர் போறோம். சமாளிச்சுடுவீங்க இல்ல..."

"ம்ம்ம்ம்... பார்க்கலாம்மா... முடியும்னுதான் தோணுது... குருவாயுரப்பன் என்ன முடிவு செய்யறானோ தெரியலையே..."

"அவர் அதையெல்லாம் நல்லபடியா முடிவு பண்ணுவாரும்மா. நீங்க கவலையே படாதிங்க."

"ஹ்ம்ம்... நீ சிரிச்சு சிரிச்சு பேசி சொன்னாலும் உன் கண்ணுல தெரியற கவலைய படிக்க முடியாத அளவு எனக்கு வயசும் அனுபவமும் இல்லன்னா நினைக்கறே... கொஞ்ச நேரம் என் பக்கத்தில உட்காரேன்."

"சொல்லுங்கம்மா..."

"எவ்வளவு பிரியமா பேசறே... அன்பா நடந்துகரே... உனக்கு புரியுதான்னு எனக்கு தெரியலை. ஹ்ம்ம்... எம்புள்ள இப்படி இருந்திருந்தா எவ்வளோ நல்ல இருந்திருக்கும்...! வரம் அப்படி..."

"வந்தாராம்மா?"

"அவன் எதுக்கு இனிமே வரப்போறான்... அதுதான் அவனுக்கு தேவையானது எல்லாமே துடைச்சு எடுத்துட்டு போயிட்டானே.... அவர்பேர்ல எதயுமே விட்டுவைகலையே... எவ்வளவு இருந்தது...? வீடு, நிலம், சொத்து, car, இன்சூரன்ஸ்... hmmmm... அவர் போனதுக்கப்புறம் என்னோட மரியாதை, வாழ்க்கை எல்லாமே அவர்கூடவே போயிடுச்சு... மிச்ச எல்லாத்தையும்தான் இந்த பாவி மகன் எடுத்துட்டு போயிட்டானே... அவர் பேரை சொல்லறதுக்கு ஒன்னுகூட விட்டு வைகலையே... அப்புறமும் எதுக்கு மறுபடி வரப்போறான்..."

"அழாதீங்கம்மா ப்ளீஸ்... கண்டிப்பா ஒரு நாள் மனசு மாறி வரத்தான் போறார்... கவலைப்படாதீங்க... இங்கே இருக்கறதுலேயே தைரியமானவங்க நீங்க... எத்தனை பேருக்கு நீங்க தைரியம் சொல்லி இருக்கீங்க... நீங்களே பாருங்க... உங்களை மாதிரி இங்கே எத்தனை பேர் இருக்காங்க... எல்லாருக்குமே கிட்டத்தட்ட உங்க பிரச்சனைதான்... சில பேர் மோசமான நிலைமைலகூட இருக்காங்க... இன்னும் சொல்லப்போனா நீங்க இங்க எங்ககூட இருக்கறது எங்களுக்கு எவ்வளவு மகிழ்சிய கொடுக்குது தெரியுமா? உங்களைமாதிரி அனுபவம் வாய்ந்தவங்கிட்டே என்னை மாதிரி இருக்கறவங்க நிறைய கத்துக்க முடியுது. வாழ்க்கையை புரிஞ்சுக்க முடியுது... எங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைச்சுகொடுத்த கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். ஒரு நிமிஷம்மா... சார் நீங்க யாரு?"

"மேடம் இங்கே ராஜெஸ்வரியம்மாங்கறது யாரு...?"

"இதோ இவங்கதான்... என்ன விஷயம்?"

"நான் யுவர் வாய்ஸ் மொபைல் கம்பெனில இருந்து வர்றேன்... இவங்க எங்க போனைத்தான் உபயோகப்படுத்தறாங்க... ஆனா பாருங்க... இது ரவிச்சந்திரன் அப்படிங்கற பேர்ல இருக்கு. ஆனா இப்ப இவங்கதான் அதை உபயோகப்படுத்தறாங்க . அதனால பேர் மாற்றம் செய்யணும். அதுக்குதான் details கலெக்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்..."

"அப்படியாம்மா...? இவர் சொல்லறது உண்மைதானா...? ஏன் சார் கண்டிப்பா பேர் மாத்தியே ஆகணுமா? அதுக்கு இவங்ககிட்டே வேற ஏதாவது அட்ரஸ் பருப் ஏதாவது கேப்பீங்களா?"

"இல்லை மேடம்... நீங்க உங்க இல்லத்தில இருந்து ஒரு லெட்டர் கொடுத்தா போதும்"

"ஏம்மா இவர் சொல்லறமாதிரி செய்துடலாமா? ஏம்மா... என்ன ஆச்சு? அழாதீங்கம்மா ப்ளீஸ்... கண்ணை துடைச்சுக்கோங்க ப்ளீஸ்..."

"இல்லைம்மா... எல்லாம் போனதுக்கு பிறகு அவர் பேர்ல இருக்கற ஒரே விஷயம் இந்த மொபைல் போன்தான்... இதுவுமா அவர் பேர்ல இருந்து மாறனும்... ஹ்ம்ம்ம்.... இது மட்டுமாவது இருக்கேன்னு சந்தோசப்பட்டேன்... அதுவும் பொறுக்கலை... சரி... விதி.... குடுப்பா... எங்க கையெழுத்து போடணும்...?"