கவிதைகள்

Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, February 9, 2012

மிச்சம்

"அம்மா வாங்க மருந்து சாப்பிடுங்க... மெதுவா... மெதுவா எழுந்துக்குங்க"

"ம்ம்ம்ம்... குடும்மா... அந்த ஜக்குல தண்ணி இருக்கு கொஞ்சம் எடுத்துக் கொடேன்"

"இந்தாங்க... இப்ப உடம்பு பரவாயில்லையாம்மா... வர்ற வாரம் இங்க இருக்கற எல்லாரும் குருவாயூர் போறோம். சமாளிச்சுடுவீங்க இல்ல..."

"ம்ம்ம்ம்... பார்க்கலாம்மா... முடியும்னுதான் தோணுது... குருவாயுரப்பன் என்ன முடிவு செய்யறானோ தெரியலையே..."

"அவர் அதையெல்லாம் நல்லபடியா முடிவு பண்ணுவாரும்மா. நீங்க கவலையே படாதிங்க."

"ஹ்ம்ம்... நீ சிரிச்சு சிரிச்சு பேசி சொன்னாலும் உன் கண்ணுல தெரியற கவலைய படிக்க முடியாத அளவு எனக்கு வயசும் அனுபவமும் இல்லன்னா நினைக்கறே... கொஞ்ச நேரம் என் பக்கத்தில உட்காரேன்."

"சொல்லுங்கம்மா..."

"எவ்வளவு பிரியமா பேசறே... அன்பா நடந்துகரே... உனக்கு புரியுதான்னு எனக்கு தெரியலை. ஹ்ம்ம்... எம்புள்ள இப்படி இருந்திருந்தா எவ்வளோ நல்ல இருந்திருக்கும்...! வரம் அப்படி..."

"வந்தாராம்மா?"

"அவன் எதுக்கு இனிமே வரப்போறான்... அதுதான் அவனுக்கு தேவையானது எல்லாமே துடைச்சு எடுத்துட்டு போயிட்டானே.... அவர்பேர்ல எதயுமே விட்டுவைகலையே... எவ்வளவு இருந்தது...? வீடு, நிலம், சொத்து, car, இன்சூரன்ஸ்... hmmmm... அவர் போனதுக்கப்புறம் என்னோட மரியாதை, வாழ்க்கை எல்லாமே அவர்கூடவே போயிடுச்சு... மிச்ச எல்லாத்தையும்தான் இந்த பாவி மகன் எடுத்துட்டு போயிட்டானே... அவர் பேரை சொல்லறதுக்கு ஒன்னுகூட விட்டு வைகலையே... அப்புறமும் எதுக்கு மறுபடி வரப்போறான்..."

"அழாதீங்கம்மா ப்ளீஸ்... கண்டிப்பா ஒரு நாள் மனசு மாறி வரத்தான் போறார்... கவலைப்படாதீங்க... இங்கே இருக்கறதுலேயே தைரியமானவங்க நீங்க... எத்தனை பேருக்கு நீங்க தைரியம் சொல்லி இருக்கீங்க... நீங்களே பாருங்க... உங்களை மாதிரி இங்கே எத்தனை பேர் இருக்காங்க... எல்லாருக்குமே கிட்டத்தட்ட உங்க பிரச்சனைதான்... சில பேர் மோசமான நிலைமைலகூட இருக்காங்க... இன்னும் சொல்லப்போனா நீங்க இங்க எங்ககூட இருக்கறது எங்களுக்கு எவ்வளவு மகிழ்சிய கொடுக்குது தெரியுமா? உங்களைமாதிரி அனுபவம் வாய்ந்தவங்கிட்டே என்னை மாதிரி இருக்கறவங்க நிறைய கத்துக்க முடியுது. வாழ்க்கையை புரிஞ்சுக்க முடியுது... எங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைச்சுகொடுத்த கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். ஒரு நிமிஷம்மா... சார் நீங்க யாரு?"

"மேடம் இங்கே ராஜெஸ்வரியம்மாங்கறது யாரு...?"

"இதோ இவங்கதான்... என்ன விஷயம்?"

"நான் யுவர் வாய்ஸ் மொபைல் கம்பெனில இருந்து வர்றேன்... இவங்க எங்க போனைத்தான் உபயோகப்படுத்தறாங்க... ஆனா பாருங்க... இது ரவிச்சந்திரன் அப்படிங்கற பேர்ல இருக்கு. ஆனா இப்ப இவங்கதான் அதை உபயோகப்படுத்தறாங்க . அதனால பேர் மாற்றம் செய்யணும். அதுக்குதான் details கலெக்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்..."

"அப்படியாம்மா...? இவர் சொல்லறது உண்மைதானா...? ஏன் சார் கண்டிப்பா பேர் மாத்தியே ஆகணுமா? அதுக்கு இவங்ககிட்டே வேற ஏதாவது அட்ரஸ் பருப் ஏதாவது கேப்பீங்களா?"

"இல்லை மேடம்... நீங்க உங்க இல்லத்தில இருந்து ஒரு லெட்டர் கொடுத்தா போதும்"

"ஏம்மா இவர் சொல்லறமாதிரி செய்துடலாமா? ஏம்மா... என்ன ஆச்சு? அழாதீங்கம்மா ப்ளீஸ்... கண்ணை துடைச்சுக்கோங்க ப்ளீஸ்..."

"இல்லைம்மா... எல்லாம் போனதுக்கு பிறகு அவர் பேர்ல இருக்கற ஒரே விஷயம் இந்த மொபைல் போன்தான்... இதுவுமா அவர் பேர்ல இருந்து மாறனும்... ஹ்ம்ம்ம்.... இது மட்டுமாவது இருக்கேன்னு சந்தோசப்பட்டேன்... அதுவும் பொறுக்கலை... சரி... விதி.... குடுப்பா... எங்க கையெழுத்து போடணும்...?"