Thursday, August 26, 2010

கட்டறுத்த கயிறு

தொப்புழ்க்கொடி யறுத்த
தாயி னுறவு

தோளில்வைத்து தாங்கிய
தந்தையி னுறவு

ஒவ்வொரு பிறந்தநாளையும்
ஒவ்வொரு விதமாய்
சிரித்துக்கொண்டே நினைவூட்டிய
சகோதர னுறவு

செல்லசண்டையில் சிணுங்கிய
சகோதரியி னுறவு

தளர்கைகளால் கன்னம்வழித்து
கதைகள் பலகூறி
கற்பனைகள் வளர்த்த
பாட்டியி னுறவு


வெள்ளியாறு போல
வெண்ணிலாவை வீட்டினுள்
வரவழைத்துத் தந்த
ஜன்னல்கம்பியி னுறவு

தினமொரு சிநேகம்
தேடித் தந்த
கொல்லைரோஜாவி னுறவு

வேகவைத்த வெய்யிலின்
வெப்பம் தணித்த
வேப்பமரத்தி னுறவு

வம்புபேசி வாயளந்த
அடுத்த வீட்டு
வனிதா அக்காவினுறவு

மழலை கொஞ்சி
முத்தத்தில் முகம் நனைத்த
அவள் குழந்தயினுறவு

குட்டியாகவே இருந்துவிடாதா
என்று ஏங்கவைத்த
கண்மருண்ட கன்றினுறவு

எல்லாவற்றையும் கட்டிபோட்டு
இழுத்துவந்துவிட்டேன் இவளை

ஒரு முழத்தில் -
நான்கட்டிய தாலிக் கயிறு...

தெரிவதில்லை...

தினம் தினம் பார்ப்பதுதான்
என் முகத்தை...

தலைவாரும் போதும்
முகம்துடைக்கும் போதும்
சவரம்செய்யும் போதும்

தினம் தினம் பார்ப்பதுதான்
என் உடலை...


உடற்பயிற்சி செய்யும்போதும்
குளிக்கும் போதும்
உடைமாற்றும் போதும்

ஆனாலும் தெரிவதில்லை...
என்னடா கருத்துட்டே
என்னடா இளைச்சுட்டே
என்று அம்மாவும் நண்பரும்
கேட்கும்வரை...


சந்தோஷம்

நாளை வார விடுமுறை
இன்று சம்பள தினம்
வெப்பம் அதிகமில்லாத மாலை
கூட்டம் இல்லாத பேருந்து
பிரயாணத்தின் போது படிக்க
பிடித்த மான புத்தகம்
நான் -
சந்தோஷமாக இருக்கிறேன்...

Thursday, August 5, 2010

குழந்தையின் சாய்ஸ்...

வாடா ராஜா வா வா
வட்டமிட்டு சுற்றுமிந்த வண்டிபார் வா
இந்தாடா செல்லம் இங்கே வா
பந்தாடச் சொல்லும் பொம்மைபார் வா

ஹெலிகாப்ட்டர் வேணுமா ஏரோப்லேன் வேணுமா?
எப்போதும் சிரிக்கும் கரடிபொம்மை வேணுமா?
எடுத்துக்கொள் கண்ணே எல்லாம் உனது
ஏங்கியழும் ஏன் உன் மனது?

சொல்ல முடியா கூட்டத்தில்
அள்ள முடியா அளவில்
எல்லாமிருந்த கடையில்
எதுவுமில்லா நிலையில்

'என்ன வேண்டும்'
என்ற கேள்விக்கு
'ம்ம்மா' என்றது
கூட்டத்தில் தொலைந்துபோன
குழந்தை...

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....

ஏறி இறங்கிய எண்ணிக்கை
எகிறிப் போனாலும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தை
விடாது பற்றியிருக்கும்
வாலிபர்கூட்டம் எனது

கூழுக்குத் திருடியவனை
கூண்டுக்கு அனுப்பிவிட்டு
கோடிகள் திருடியவனை
கோட்டைக் கனுப்பும்
கில்லாடிகள் எம்காவலர்...

பார் முழுதும் பார்கள் பார்
தீர்ந்ததா தண்ணீர் பஞ்சம்...?

மீன் கேளாமல்
தூண்டில் கேட்டேன்
புழுவாகிப் போனேன்...!

வந்துவிட்டனர் மறுபடி
வாய் நிறைய வாக்குறுதிகளோடு

(வாய்யா வா....)

மத்திக்கு அனுப்பிவைப்போம்
மனம்நிறைய கனவுகளோடு

(எடுடா அந்த போஸ்டரை )

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....

Wednesday, July 28, 2010

அம்மா...

அம்மா-
என் செல்ல அம்மா

தினம் எனக்கு முத்தம் தந்து
முத்தம் பெறத்துடிக்கும் அம்மா
தினம் எனக்குத் தாலாட்டு பாடி
தூங்கச் செய்யும் அம்மா

விரல் தொட்டு தளிர்நடை நடந்துனை
உள்ளம் விம்மிட வைப்பேன்
உன் கன்னம்தொட்டு எச்சில் முத்தமிட்டு
நெஞ்சம் நனைய வைப்பேன்

கொஞ்சும் மழலை பேசி உன்னை
கொஞ்சம் மயங்க வைப்பேன்.
தஞ்சம் தஞ்சம் என்று உன்னை
எனக்குள் தடுமாற வைப்பேன்

அப்பா அவர் மூலம் இந்த
உலகத்தை நான் அறிவேன்
அம்மா உன் மூலம் இந்த
உலகத்தை நான் அடைவேன்

மனதில் என்றும் உங்களை நிறுத்தி
முதியோர் இல்லம் மறக்கச் செய்வேன்
மகனிவன் என் மகன் என்று
மனம் நெகிழச்...

பாடிக் கொண்டிருந்த குழந்தையின் பாடல்
பாதியில் முடிந்து போனது -
வெற்றிகரமாக முடிந்த
கருச்சிதைவால்....

பத்தோடு பதினொண்ணு...

தொலைக்காட்சியில் -
திரைப்படம்,
திரைப்பாடல்,
தொடர்,
செய்தி,
விளம்பரம்,
விவாதம்,
பட்டிமன்றம்,
பாட்டுக்கு பாட்டு,
மற்றும் -
குடியரசுதின நிகழ்ச்சி...

கண்டதும் கொண்டதும்

காதல் கண்டேன் -
கவிதை வந்தது!
கலவி கண்டேன் -
காமம் வந்தது!

காசுபணம் கண்டேன்-
கர்வம் வந்தது!
காலம் கண்டேன்-
கவலை வந்தது!

கல்வி கண்டேன்-
அறிவு வந்தது!
அறிவு கண்டேன்-
கேள்விகள் வந்தது!

கேள்விகள் கண்டேன்-
கருத்து வந்தது!
கருத்து கண்டேன்-
குழப்பம் வந்தது!

குழப்பம் கண்டேன்-
தெளிவு வந்தது!
கண்டதெல்லாம் துறந்தேன்-
ஞானம் வந்தது...!